பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று (11.02.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேயர் பிரியா அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கையினால் இயக்கும் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், கையினால் இயக்கப்படும் 412 கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வாகனங்களில் மூலம் மேற்கொள்ளப்படும் தீவிர கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் பணிகள் மற்றும் கையினால் இயக்கப்படும் கொசு ஒழிப்பு புகைப்பரப்புதல் மற்றும் கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளை 2 மடங்காக அதிகரித்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கும் நீர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். குறிப்பாக, மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள தண்ணீர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களில் கொசு ஒழிப்பு புகைப்பரப்புதல் மற்றும் கொசுப்புழு மருந்து தெளித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நீர்நிலைகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்க முடியாத இடங்களில் தேவைப்படின் கொசு ஒழிப்பு எண்ணெய் பந்து மற்றும் கொசு ஒழிப்பு எண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்கள் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தியும் கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும். இனிவரும் 15 நாட்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
கொசுக்களினால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் போர்க்கால நடவடிக்கையாக கருதி இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கொசுத்தொல்லை இல்லாத மாநகராட்சியாக பெருநகர சென்னை மாநகராட்சி திகழ்ந்திட சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மண்டல நல அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Turkey Earthquake:துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி பலியான இந்தியரின் உடல் மீட்பு