சென்னை: சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்கள், உலகளவிலான ரசிகர்களை சென்றடைவதுடன், அதற்குரிய வர்த்தகத்தையும், அங்கீகாரத்தையும் பெறுகிறது. அந்த வகையில் கனடாவில் உள்ள டொரன்டோவில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்ற 47ஆவது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிடப்பட்டன.
இதில் இந்தியாவிலிருந்து புராணங்களுக்கான திரைப்பட பிரிவில், தமிழில் உருவான ‘மாயோன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ஆங்கில மொழி பெயர்ப்புடன் இடம்பெற்ற இந்த திரைப்படத்தை பார்வையிட்ட நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள், தொல் பொருள் ஆய்வு செய்து, தற்காலத்திற்கேற்ற வகையில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்த படத்தின் திரைக்கதையை வியந்து பாராட்டியதுடன், படம் நிறைவடைந்ததும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
'மாயோன்' திரைப்படம் தமிழில் வெளியாகி, ஐந்து வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பட குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாராகி, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான ‘மாயோன்’ படத்திற்கு சர்வதேச விருது கிடைத்திருப்பது, தமிழ் திரை உலகுக்கு முன்னேற்றம் என திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே பகவான் கிருஷ்ணனின் லீலைகளை மையப்படுத்தி, தெலுங்கில் தயாராகி, இந்தியில் வெளியிடப்பட்ட ‘கார்த்திகேயா 2’ படம் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், ‘மாயோன்’ படத்தையும் இந்தியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அழகிய தாமரை அமலாபால் ஹாட் போட்டோ கலெக்ஷன்ஸ்