மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததன் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கலைமகள் கல்வி நிறுவனம் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் செம்பனார்கோவில், திருக்கடையூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் 19 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 'வீடு வழிக்கல்வி' என்ற முறையில் அந்தப் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறார்கள்.
மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்கும், ஆசிரியர்கள்- மாணவர்களிடையேயான நல்லுறவு நீடிப்பதற்கும் இந்தமுறை கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர்.
இதன்படி அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மாணவர்களை ஒன்று சேர்த்து அப்பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளிலேயோ அல்லது ஆசிரியர்களின் வீடுகளிலேயோ காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
இதில் கலைமகள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அப்பகுதியில் வசிக்கும் பிற பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி பெற்றோர்களின் வரவேற்பை பெற்றுள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சிரமப்படும் நிலையில், தங்களுடைய இந்த முயற்சி நல்ல பலன் அளிப்பதாகவும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை" என்று தெரிவிக்கின்றனர்.
முன்னதாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் மாணவர்களுக்கு 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விதவிதமான முறையில் மோசடி: சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு