சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலைப் பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ் 19 வயது பயிற்சி மாணவி ஒருவரை நாமக்கல் மாவட்டத்திற்கு போட்டிக்காக அழைத்து சென்றுவிட்டு வரும் வழியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கெபிராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கடந்த 30ஆம் தேதி கெபிராஜ் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கெபிராஜிக்கு வருகிற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைத்தனர்.
கெபிராஜ் மீது புகார் அளித்த மாணவி வேறு மாநிலம் என்பதாலும், குற்றம் நடந்தது நாமக்கல் மாவட்டம் என்பதையும் கருத்தில் கொண்டு சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி காவலர்கள் தொடங்கி உள்ளனர். அதன், ஒரு கட்டமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று (ஜூன் 11) காவலில் எடுத்துள்ளனர்.
அவரை, இரண்டு நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், கெபிராஜ் வேறு பயிற்சி மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும், தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.