இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி, பூங்கா, வணிக வளாகம், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, ஊரடங்கால் முன்னரே முடிவு செய்யப்பட்ட பல நிகழ்வுகள் தள்ளிப்போயுள்ளன. குறிப்பாக திருமணங்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் வாழ்வின் அடுத்தகட்டம் என்று கூறப்படும் திருமணங்கள், கரோனாவின் கோரத் தாண்டவத்தால் சிலருக்கு எளிமையாகவும், பலருக்குத் தள்ளியும் வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு திருமண நிகழ்வுக்காக மண்டபத்தை முன்பதிவு செய்திருந்தவர்கள் அனைவரும் முன்பதிவை ரத்து செய்து விட்டதால், திருமண மண்டபங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன.
பொதுவாக சித்திரை மாதத்தில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். தெருவுக்கு ஒரு வீட்டிலாவது ஏதாவது ஒரு சுப நிகழ்வு நடக்கும். திருமண மண்டபங்கள் திரைப்பாடல்களை ஒலிக்கவிட்டும், பல வண்ண விளக்குகளை மிளிரச் செய்தும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், நிகழ்ச்சிகள் ஏதுமில்லாமல் வெறிச்சோடி இருக்கின்றன மண்டபங்கள், வருமானமின்றி இருக்கின்றனர் அதன் உரிமையாளர்கள்.
இதுபற்றி திருமண மண்டப உரிமையாளர் தணிகாசலம் கூறுகையில், " ஊரடங்கால் அனைத்து திருமண முன் பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனால் நாங்கள் மட்டுமல்லாமல் திருமணம் சார்ந்த பூ விற்பனையாளர்கள், சமையல் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், புரோகிதர்கள் என அனைவரும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாகியுள்ளது'' என வேதனைத் தெரிவித்தார்.
வருங்காலத்தை எண்ணி பலக் கனவுகளுடன் திருமணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கும் சரி, அத்திருமணங்கள் நடக்கவிருந்த மண்டப உரிமையாளர்களுக்கும் சரி, எப்போதும் இல்லாத சித்திரையாகவும், வாழ்வில் இனி எப்போதும் மறக்க முடியாத சித்திரையாகவும் இம்மாதம் மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகருக்கு கரோனா தொற்று