சென்னை: கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழக அரசியலின் முக்கிய விஷயங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட போஸ்டர்களில் ஆண் நாயகர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பெண் நாயகிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என கருத்து தெரிவித்தார்.
திரைப்பட நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
இவ்வாறு தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர், பாலியல் அவதூறு மற்றும் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில், கடந்த நவ.23-ஆம் தேதி மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும், மன்சூர் அலிகான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரிய நிலையில், நடிகை திரிஷாவும் மன்னிப்பை
ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு திங்கட்கிழமை (டிச.11) விசாரணைக்கு பட்டியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம்: காவல்துறை கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில்!