சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியரின் செல்போன் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று செல்போன் திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என தெரிய வந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளில் பதிவான முக அடையாளங்களை வைத்து வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரை, பர்மா பஜாரில் சுற்றி திரிந்த போது போலீசார் கைது செய்தனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறிவைத்து கடந்த 5 ஆண்டுகளாக செல்போன் திருட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக தமிழகம், ஆந்திராவில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, திருப்பதி அரசு மருத்துவமனை என பல பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை மட்டுமே குறிவைத்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை திருடி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் முனியாண்டி உடலில் தீக்காயங்கள் இருந்ததாலும், மாற்றுதிறனாளி என்பதாலும் சிகிச்சைக்கு செல்வதாக கூறி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை சநதேகத்திற்கு இடமின்றி அணுகி திருடியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். முனியாண்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மருத்துவமனை செல்லும் போது கையில் ஒரு நோட்டுடன் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் சிகிச்சை தொடர்பாக பேசுவேன் என்றும், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் மின்னல் வேகத்தில் அவர்களின் செல்போன்களை நோட்டிற்குள் வைத்து திருடிவிட்டு வந்துவிடுவேன் என முனியாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரிடம் செல்போன் திருடிய வழக்கில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் முனியாண்டி. பின்னர் மூன்று மாதத்திற்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே 32 செல்போன்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் திருடியுள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் திருடிய ஐபோன், ஒன்பிளஸ் போன்ற உயர் ரக செல்போன்களையும் பர்மா பஜார் மற்றும் ரிச்சி தெருக்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் விலைக்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மதுகுடித்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.
முனியாண்டியின் தந்தை எழிலகத்தில் பணிப்புரிந்து வந்த நிலையில் குடும்ப பிரச்சனையில் சொத்துக்கள் கொடுக்காமல் ஏமாற்றியதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் முனியாண்டி ஈடுப்பட்டுள்ளார். அப்போது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு கை விரல்கள் துண்டிக்கப்பட்டதிற்கு பிறகு மருத்துவர்கள் முனியாண்டியை காப்பாற்றியுள்ளனர்.
தனது கை விரல்களை அகற்றியதால் மருத்துவர்களை தனக்கு பிடிக்காது எனவும் அதனால் அவர்கள் செல்போன்களை மட்டுமே திருடி வருவதாகவும், பொதுமக்கள் செல்போன்களில் கை வைக்க மாட்டேன் அவர்கள் பாவம் எனவும் முனியாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட முனியாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், பர்மா பஜார் மற்றும் ரிச்சி தெருவில் திருடப்பட்ட விற்கப்பட்ட செல்போன்களை மீட்கும் பணியிலும் , திருட்டு செல்போன்களை வாங்கிய மருது என்பவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞர் வெட்டி படுகொலை... கண்மாயில் தலையை தேடும் போலீஸ்; சிவகங்கையில் கொடூரம்