சென்னை: பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (71). கடந்த ஜுன் மாதம் தாம்பரம் சந்தையில் காய்கறி வாங்குவதற்காக வந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் மூதாட்டியிடம் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
அப்போது மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார். இதேபோல் அக்டோபர் மாதம் பள்ளிக்கரனை பகுதியைச் சேர்ந்த மற்றொரு மூதாட்டியான சரோஜாவிடமும் 2 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றார்.
இதனையடுத்து மூதாட்டிகள் இருவரும் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தாம்பரம் பகுதியில் சுற்றித்திரிந்த சித்தரவேல் (39) என்பவரை சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் மூதாட்டிகளிடம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் விசாரணையில், தமிழ்நாட்டில் 20 காவல் நிலையங்களில் மூதாட்டிகளை குறிவைத்து ஏமாற்றியதாக 60க்கும் மேற்பட்ட வழக்குகள் சித்தரவேல் மீது உள்ளது. நகைகளை திருடிய பின்பு அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்ந்தது தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் சித்தரவேலை தாம்பரம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தன்பாலின நாட்டத்தைத் தடுக்க நடந்த திருமணம் - குழந்தை பெற்றபின் தலைமறைவான பெண்! - கைவிரித்த நீதிமன்றம்!