சென்னை: தேனாம்பேட்டை செனடாப் சாலையிலுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டின் முன்பு இன்று (செப். 27) காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தியாகராய நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
முதற்கட்ட விசாரணை
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீக்குளிப்பில் ஈடுபட்ட நபர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பதும், இவர் தமிழ்நாடு பறையர் பேரவையின் மாநிலச் செயலாளராக இருந்துவருவதும் தெரியவந்தது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும்விதமாக முதலமைச்சரைச் சந்தித்து முறையிட முயன்றதாகவும், அவரைச் சந்திக்க முடியாததால் வெற்றிமாறன் தீக்குளிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தீக்குளிப்பில் ஈடுபட்ட வெற்றிமாறனை மருத்துவமனையில் சந்தித்து விசாரித்தார்.
முதலமைச்சர் வீட்டின் முன் ஒருவர் தீக்குளிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாமிங் ஆப்ரேஷன்- சென்னையில் முக்கிய ரவுடிகள் கைது