ஒடிசா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மல்லிக் என்கிற புல்லு(37). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் 1995 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது இவரது தாய் இறந்ததாகத் தெரிகிறது. இதனால் எந்த ஒரு ஆதரவும் இல்லாததால் ராஜ்குமார் தொலைந்துவிட்டார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தேடியும் கிடைக்கவில்லை.
வட மாநிலங்களில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் யாராவது காணாமல் சென்றுள்ளனரா என மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா ஒவ்வொரு காப்பகத்திலும் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது பெரம்பலுாரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டபோது ராஜ்குமார் என்ற நபர் தனது சொந்த ஊர் ஒடிசா எனவும், தான் 1995 ஆம் ஆண்டு தொலைந்து விட்டதாகவும் இவர் காப்பகத்தில் சிகிச்சை பெற்று சற்று முன்னேற்றம் அடைந்து வந்துள்ளதாகவும் தன்னை குடும்பத்துடன் இணைத்து வைக்க ஆய்வாளரிடம் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் தாஹீரா, ஒடிசா பகுதியில் உள்ள சோரா என்ற காவல் நிலையத்திற்கு போன் செய்து விசாரிக்கையில் ராஜ்குமார் மல்லிக்கின் உறவினர்களிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் செய்து பேசும்போது ராஜ்குமார் மல்லிக் மனநலம் பாதிக்கப்பட்டு தொலைந்து விட்டதாக தெரியவந்துள்ளது. ராஜ்குமார் மல்லிக்கின் உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்பு உறவினர்களைக் கண்ட ராஜ்குமார் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்தார். மேலும் இவர்களது போக்குவரத்து செலவையும் குற்ற ஆவண காப்பகம் ஏற்றுக் கொள்ளும் என்றும் ஆய்வாளர் தாஹிரா கூறினார். இதுமட்டுமில்லாமல் காணாமல் போன வட மாநிலத்தவரை மாநில குற்ற ஆவண காப்பகம் கண்டுப்பிடிப்பது இது 150ஆவது முறை எனவும் இந்தியா முழுவதும் 200ஆவது முறை எனவும் தெரிவித்தார்.