சென்னை வேளச்சேரியில் நாகராஜன் என்பவரின் மகள் ஜுன் 14ஆம் தேதி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் தனது மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தங்களுக்கு சந்தேகமாக உள்ளது என பெற்றோர் காவல் துறையினரிடம் கூறினர். இதனையடுத்து அடையாறு துணை ஆணையர் விக்ரமன், திருவான்மியூர் உதவி ஆணையர் ரவி ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமாக சிறுமியின் பெற்றோர் அலைபேசியில் குறுஞ்செய்திகள் இருந்தன. குறுஞ்செய்தி அனுப்பிய எண்ணானது நாகராஜன் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பொள்ளாச்சியை சேர்ந்த குணசீலன் (33) என்பது தெரியவந்தது.
சிறுமி உயிரிழந்தவுடன் குணசீலன் வாடகை வீட்டிலிருந்து காலி செய்து சென்றுள்ளார். குணசீலன் குறித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்ததாவது, "எங்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் அவர். பேப்பர் போடும் வேலை செய்கிறார்.
தன்னுடைய மகளிடம் உடன் பிறந்த அண்ணணைபோல் பழகி வந்தார். சிறுமியை டியூசன் அழைத்து செல்வது வழக்கம்" என்றனர்.
பின்னர் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த குணசீலனை கைது செய்தனர். சைபர் கிரைம் பிரிவில் இவரது அலைபேசியை கொடுத்து அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மென்பொருள் மூலம் எடுத்து பார்த்தனர்.
அப்போது சிறுமியுடன் குணசீலன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம், சிறுமியின் ஆபாசப்படம் உள்ளிட்டவை இருந்தது. மேலும் இந்த ஆபாச படங்களை வைத்து குணசீலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
அதற்கு சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறப்போவதாக தெரிவித்துள்ளார். குணசீலன் அப்படி செய்தால் ஆபாசப் படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் குணசீலன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை: இளைஞர் கைது!