சென்னை மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ் (45). இவருக்கு மனைவி சிவகாமி என்ற மனைவியும் ஆதித்யா (15), காவ்யா (13) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை தங்கராஜ் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டில் பாட்டி புஷ்பா, ஆதித்யா, காவ்யா மட்டும் இருந்துள்ளனர். புஷ்பாவும் ஆதித்யாவும் கழிப்பறை சென்ற பின் காவ்யா மட்டும் வீட்டில் தனியாகப் படித்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, முகத்தை மூடிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், காவ்யாவின் முகத்தில் மயக்கமருந்து கலந்த கைக்குட்டையால் மூடி மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர், வீட்டிலிருந்த பீரோவை திறந்து 10 சவரன் நகை, 45 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து புஷ்பா வீட்டினுள்ளே வந்து பார்த்தபோது காவ்யா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின், தகவலறிந்து வீட்டிற்கு வந்த தங்கராஜ், மயங்கி கிடந்த காவ்யாவை அங்குள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். இதுகுறித்து அம்பத்தூர் காவல் துறையினரிடம் தங்கராஜ் புகார் அளித்ததின்பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கு: நில உரிமையாளருக்குப் பிணை!