சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதியும், காவலர்கள் நல வாரியத்தின் தலைவராdன சி.டி. செல்வத்தின் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் சக்திவேல், ஆயுதப்படை காவலரான இவர் நேற்று முன்தினம் (மார்ச்.22) காலை நீதிபதியுடன் காரில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அசோக் நகர் சிக்னல் அருகே வரும் போது காரின் முன்பு திடீரென மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நின்றது.
இதனையடுத்து, உடனே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சக்திவேல் கீழே இறங்கி சாலையில் நின்ற இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்த மூவர் காவலர் சக்திவேலைக் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்துத் தகவலறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கே.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவ இடத்தில் காவலரை வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான முக அடையாளங்களை வைத்து மூன்று பேரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்தநிலையில் கண்ணகி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை கே.கே.நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரை காவல் நிலையத்தில் வைத்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை