சென்னை: ஆவடி அருகே பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (52). கணவரை இழந்த இவர் கூலித்தொழில் செய்து, தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். சித்ராவிற்கு 2.5 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய நினைத்த சித்ரா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, தனது வீட்டு அருகில் வசிக்கும் அந்தோணி சவரிமுத்து (57) என்பவரை அணுகி உள்ளார்.
அந்தோணி சவரிமுத்து, கடந்த வாரம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்ய ரூ. 2.5 லட்சம் முன்பணமாக வாங்கி, சித்ராவிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து தனக்கு சேர வேண்டிய கமிஷன் ரூ.10ஆயிரத்தை சித்ராவிடம் கேட்டுள்ளார். ஆனால், முழுத் தொகையும் வந்தபிறகு கமிஷன் தருவதாக சித்ரா கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 27) இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி சவரிமுத்து அருகில் கிடந்த இரும்பு பைப்பால் சித்ராவின் தலை, முகம், கை ஆகிய இடங்களில் தாக்கியுள்ளார்.
இதில், சித்ராவின் இடது கை முறிந்தது. மேலும், சித்ராவின் மண்டை உடைந்து, பற்களும் நொறுங்கின. இதில், படுகாயம் அடைந்த சித்ராவை உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இன்று (பிப்ரவரி 28) காலை, அந்தோணி சவரிமுத்துவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காரை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம்: 4 வயது குழந்தை உயிரிழப்பு