சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் பார்சல் சர்வீசஸ் நிறுவனத்திலிருந்து கத்தார் நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் பார்சல் ஒன்றில் போதைப்பொருள்கள் இருப்பதாக, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில், 22 பொம்மை பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.6 கிலோ உலர் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த உலர் கஞ்சா, மேற்கு வங்கத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் கத்தார் நாட்டிற்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரசாத் என்பவர் பார்சலை அனுப்பியது தெரியவந்தது.
அவரை கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து கொல்கத்தா காவலர்கள் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட பிரசாத்தை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உலர் கஞ்சா, ஆந்திரா, ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் விளையும் கஞ்சா செடிகளில் இருந்து தயாரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று இறுதியாகிறதா அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல்?