சென்னை திருவான்மியூர் சுப்ரமணியம் தெருவை சேர்ந்த 72 வயதான ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் அடையாறு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், தன்னிடம் போனில் பேசிய நபர் ஒருவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக கூறி, 12,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் அவர் கூறியது போல பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் பணத்தை மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார்.
இதேபோல 62 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அலுவலர் ஒருவரும் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், புழல் பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டனை கைது செய்தனர். விசாரணையில், மணிகண்டன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பிரபல நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்ததாகவும், நாளடைவில் அங்கு பங்குச்சந்தை குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு தானும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்து ரூபாய் 60 லட்சம் வரை இழந்த மணிகண்டன்,பணத்தை மீட்பதற்காக வீட்டிலிருந்த பொருட்கள் நகைகள் என அனைத்தையும் அடகு வைத்து முதலீடு செய்துள்ளார். அந்த முதலீடுகளும் இழப்பை சந்திக்கவே ஏற்கனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களிடம் ஆசைவார்த்தை கூறி மோசடியாக பணத்தை வாங்கி மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
ஏற்கனவே பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் விவரங்களை திருட்டி அவர்களுடன் பேசியுள்ளார்.
மேலும் இதற்கு முன் பணியாற்றிய நிறுவனத்தில் முதலீடு செய்த ஓய்வு பெற்ற அரசு, தனியார் அலுவலர்க்ளை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு மாதம் பென்சன் தொகை வரும் என்பதால் அவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மணிகண்டன் மீது திருவான்மியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து ரூபாய் பத்தாயிரம் பணத்தையும் செல்போனையும் மீட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் 2021: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 132 ரவுடிகள் கைது!