சென்னை மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா காலத்திலும் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கஞ்சா வியாபாரிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். சென்னையில் அதிகமுறை கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்களை சேகரித்து, அதில் மிக முக்கிய கஞ்சா வியாபாரியான ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (எ)கஞ்சா ரமேஷ் என்பவரைக் காவல் துறையினர் பின்தொடர்ந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக கஞ்சா ரமேஷை பின்தொடர்ந்ததில், ஆந்திர மாநிலப் பகுதியில் கஞ்சாவை வாங்கி, காய்கறி ஏற்றி வரும் லாரியில் மறைத்து வைத்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளார். மேலும், காவல் துறைக்குச் சந்தேகம் வராமல் இருக்க ஆட்டோவில் மூன்று பெண்களுடன் கோயம்பேட்டிற்குச் சென்று காய்கறியுடன் கஞ்சாவை மறைத்துக் கொண்டு, எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார், கஞ்சா ரமேஷ். கரோனா தொற்றின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றிய போதும்; அதேபோல் கஞ்சாவைக் கடத்தி வந்துள்ளார்.
கடத்தி வந்த கஞ்சாவை மயிலாப்பூர், அடையாறு, மந்தைவெளி, தேனாம்பேட்டை ஆகியப் பகுதிகளில் பொட்டலம் 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்று வந்தது காவல் துறைக்குத் தெரியவந்தது. பின்னர் 2 மாதங்களாக விவரங்களைச் சேகரித்து நேற்று(ஜூன்9) முக்கியக்குற்றவாளியான கஞ்சா ரமேஷை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவரது கூட்டாளியான நிஷா, ராஜேஷ்வரி, சுப்புலட்சுமி என மூன்று பெண்கள் உட்பட எட்டு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 34 கிலோ கஞ்சாவை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,927 பேருக்கு கரோனா