சென்னை: கே.கே நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன்நாத் (51), இவர் ஐடி கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தீவிர சாய்பாபா பக்தரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சாய்பாபா பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சபரி நாதன் என்பவருடன் மோகன் நாத்திற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் சாய்பாபா பற்றிய பல கதைகளை மோகன் நாத்திற்கு சபரி நாதன் கூறியதால் அவரை நம்பி இருவரும் நண்பர்களாகி உள்ளனர். சபரிநாதன், இரட்டை சைக்காலஜி படிப்புகள் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோகன்நாத்தின் இரண்டு சகோதரர்களும் இணைந்து அவருக்கு சூனியம் வைத்திருப்பதால் தான் அவருக்கு நல்ல காரியங்கள் பல தடைப்பட்டு வருவதாகவும், இதனால் பரிகாரம் செய்ய வேண்டும் என மோகன்நாத்தை சபரி நாதன் மூளைச்சலவை செய்து உள்ளார். மேலும் அவசர தேவைக்காக சுமார் 3 முறை 2.5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் செய்வினையை நீக்க மேலும் சில பரிகார பூஜை செய்ய வேண்டும் என மோகன்நாத்திடம் இருந்து 15 சவரன் நகைகளை சபரிநாதன் பெற்று சென்றுள்ளார். பல நாட்களாகியும் சபரி நாதன் திரும்ப வராததால் சந்தேகமடைந்த மோகன் நாத், சபரி நாதனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன் நாத் மே மாதம் 12ஆம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த சபரி நாதனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சபரி நாதனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தும் போது, சூளைமேட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மோகன் நாத்தின் அண்ணன் கோபியின் மனைவி சிவகாமி என்பவர் மாசாணி அம்மன் கோவிலில் வைத்து சபரி நாதனை சந்தித்து உள்ளார். அப்போது மோகன் நாத்தின் குடும்பத்திற்கும், சிவகாமி குடும்பத்திற்கும் பிரச்சனை அடிக்கடி ஏற்படுவதாகவும், இதனால் மோகன்நாத்தின் குடும்பத்தில் சூனியம் வைக்குமாறு சிவகாமி சபரி நாதனிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன் நாத் சாய்பாபாவின் பக்தர் எனவும் பணம் அதிகமாக இருப்பதாகவும் சபரி நாதனிடம் சிவகாமி தெரிவித்துள்ளார். இதனால் சபரி நாதன் மோகன் நாத்திடம் பழகி பணம் மற்றும் நகைகளை பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சபரி நாத்திடமிருந்து 60 ஆயிரம் பணம் மற்றும் 9 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோசடி செய்த சில நகைகளை பாண்டிச்சேரியில் சபரி நாதன் விற்று இருப்பது தெரியவந்ததையடுத்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அடிக்குறாங்க, அடிக்குறாங்க; நெல்லையில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி!