சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அப்பகுதியில் ஆரிய திராவிட முன்னேற்ற கழகம், அம்மா முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் போன்ற பதிவு செய்யப்படாத அமைப்புகளை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ராமதாஸை இழிவுபடுத்தும் விதமாகவும் சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்ட பால்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட பாமக தலைவர் ஜோஷ்வா சைபர் க்ரைம் காவலர்களிடம் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் காவலர்கள், பால்ராஜை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷ்வா, "தமிழ்நாட்டிற்காகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, சமூகநீதிக்காகத் தொடர்ந்து போராடிவரும் ராமதாஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.
இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு, சாதிக் கலவரங்களை தூண்டும் நபர்களை தடுக்க வேண்டும். மேலும், அம்மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு!