கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி புளியந்தோப்பு துணை ஆணையரை சந்தித்து மூதாட்டியான டாக்டர் சந்திரமதி ஆசிர்வாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில் நிலையான வைப்புத் தொகைக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ஹரிகுமார் என்ற நபர் வங்கி விவரங்களை சேகரித்துக் கொண்டு தன்னிடம் பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர், சந்திரமதியின் வங்கிக் கணக்கு பணப்பரிவர்த்தனைகளை ஆராய்ந்தபோது விக்னேஷ் என்பவரின் ஆக்ஸிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரிக்கும்போது தனது நண்பரான ஹரிகுமார் (45) என்பவருக்கு கணக்கு தொடங்கி கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
வேலை இழந்து மோசடியில் நுழைந்த வங்கி மேலாளர்
பின்னர் தனிப்படை அமைத்து ஹரிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஹரிகுமார் 10ஆண்டுகளாக ஸ்டாண்டர்ட் சார்டர்டு வங்கியில் பிஸினஸ் டெவலப்மெண்ட் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். நிலையான வைப்புத் தொகை வைத்துள்ள முதியோர்களை அவர் நன்கு தெரிந்தும் வைத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கின்போது நடந்த ஆள் குறைப்பின்போது ஹரிகுமாரை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.
முதியோர்களை குறிவைத்த ஹரிகுமார்
இதனால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு தவித்து வந்த ஹரிகுமார் மோசடியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். அதன்படி நிலையான வைப்புத் தொகை வைத்துள்ள முதியவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களைக் குறிவைத்து அவர் மோசடியில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் தான் வங்கியில் இருப்பதை போலவே முதியவர்களை நம்ப வைத்து வங்கியில் தரும் வட்டியை விட பல மடங்கு உயர்த்தி தருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இதே போல் 10க்கும் மேற்பட்ட முதியோர்களை நம்பவைத்து ஐந்து கோடிக்கும் மேலாக ஹரிகுமார் பண மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் தான் சம்பாதித்த பணத்தை தனது பெயரிலும் தனது மனைவியின் பெயரிலும் ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்தது.
இவரிடமிருந்து 50 சவரன் நகை, 1.5 கோடி ரூபாய் பங்குச்சந்தை முதலீடு, 32 ஆயிரம் ரூபாய் பணம், கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஹரிக்குமார் தொடங்கிய ஸ்ரீராம் அசோசியேட்ஸ் என்ற கணக்கின் பெயரில் காசோலை பெற்று வந்ததால் ஸ்ரீராம் நிறுவனம் என்று நினைத்து முதியோர் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஹரிகுமார் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இது போன்று பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிகையாளரின் நேரடி சாட்சியங்கள்!