சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (49). இவர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகியது. இதையடுத்து காவல் துறையினர் ஶ்ரீநிவாஸை கைது செய்வதற்காக தேடி வந்தனர். ஆனால், அவர் காவல் துறையினரிடம் இருந்து தப்பி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் ஶ்ரீநிவாஸ் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இருக்கிறார் என்ற தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து ஹைதராபாத் காவல் துறையினர், ஶ்ரீநிவாஸை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போட்டு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (செப்.28) சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலையம் குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து பயணிகளை விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.
அதே விமானத்தில் ஹைதராபாத் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீநிவாஸ் சிங்கப்பூருக்கு தப்பி செல்வதற்காக வந்தபோது. அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள் இவர் இரண்டு ஆண்டுகளாக ஹைதராபாத் காவல் துறையினரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து ஶ்ரீநிவாஸின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அவரை பிடித்து ஒரு தனி அறையில் அடைத்து வைத்தனர். அதோடு ஹைதராபாத் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் ஸ்ரீநிவாஸை கைது செய்து ஹைதராபாத் கொண்டு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
இதையும் படிங்க:பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!