புதுச்சேரி: காங்கிரஸ் அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர், மல்லாடி கிருஷ்ணா ராவ். இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸிலிருந்து விலகி என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட்டார்.
இவரின் சொந்தத் தொகுதியான ஏனாமில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமி போட்டியிட்டார். தனது தொகுதியை விட்டுக்கொடுத்த மல்லாடி கிருஷ்ணா ராவ் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டு கேட்டார்.
ஆனாலும், ஏனாம் தொகுதியில் ரங்கசாமி தோல்வியடைந்தார். எனினும், சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது.
இதில், மாநிலங்களவை எம்.பி., பதவியைப் பெற மல்லாடி கிருஷ்ணா ராவ் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டார். இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்றுத் தர முயன்றார்.
டெல்லி பிரதிநிதியாக பதவியேற்ற மல்லாடி கிருஷ்ணா ராவ்
ஆனால், பாஜக மேலிடம் நேரடியாக தலையிட்டதால் மாநிலங்களவை எம்.பி., பதவி பாஜகவுக்குச் சென்றது. பாஜக பொருளாளர் செல்வகணபதி எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி கிடைக்காத மல்லாடி கிருஷ்ண ராவிற்கு, புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி பதவிக்கு ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கான கோப்பு ஆளுநர் தமிழிசையிடம் அனுமதி கேட்டு அனுப்பி வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (அக்.08) வெளியானது.
இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியாக பதவி வழங்கப்பட்டது.
இந்த நியமன உத்தரவை முதலமைச்சர் ரங்கசாமி அவரிடம் வழங்கினார். தொடர்ந்து அவருக்கு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: ரூ. 50ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கிய முதலமைச்சர்