சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ள 403 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 403 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நோட்டீஸை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி சிட்லபாக்கம் ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், வரைபடங்களை மாவட்ட வாரியாக தொகுத்து தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படாமல் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
மேலும் சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுப்பதை முன்னோடி திட்டமாக கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ’அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயார் ’ - அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்