சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதையடுத்து நீதிபதி தஹில் ரமாணி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணைகளில் தற்போது பங்கு கொள்ளவில்லை. இந்நிலையில் நீதிபதி தஹில் ரமாணியின் பணியிடமாறுதல் பரிந்துரைக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,
- ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டவர், மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்வது அனுமதிக்கப்பட்டதா?
- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிடமாறுதல் முடிவு குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகிறதா?
- உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால் மேற்கொள்ளப்படுகிறதா?
- தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் பணியிடமாறுதல் செய்ய முடியுமா?
- பணி ஓய்வுபெறவுள்ள நிலையில் தலைமை நீதிபதியை பணியிடமாறுதல் செய்ய முடியுமா?
என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், அந்த மனுவில், தலைமை நீதிபதியை பணியிடமாறுதல் செய்வது தொடர்பாக கொலிஜியம் நீதித் துறை உத்தரவாக பிறப்பிக்கவில்லை; அது நிர்வாக உத்தரவு என்பதால் வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு, வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு - உயர்நீதிமன்றம்