சென்னை: கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதைப் பின்பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் நேரடியாக வர அனுமதி மறுக்கப்பட்டு, காணொலி காட்சி மூலமாக விசாரணைகள் நடத்தப்பட்டன.
நீதிபதிகள் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் நேரில் ஆஜராகி வழக்குகளை நடத்தி வந்த நிலையில், கரோனா சிகிச்சைக்கான ஆக்ஸிஜன், படுக்கை வசதி வழக்குகள், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான வழக்குகள், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளும் காணொலியில் நடத்தப்பட்டன.
இந்நிலையில் காணொலியில் ஆஜராவது சிரமமாக இருப்பதாக வழக்கறிஞர் சங்கம் வைத்த பல்வேறு கோரிக்கைகளையும், கரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் கடந்த வெள்ளிக்கிழமையன்று (நவ.12) கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்.
அதன்தொடர்சியாக இன்று (நவ.15) முதல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களின் உதவியாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேநேரம், வழக்கறிஞர் சங்கங்கள், அலுவலக அறைகள், நூலகங்கள் ஆகியவையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தளர்வுகள் வழங்கப்பட்ட முதல் நாள் என்பதால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவது சற்று குறைவாகவே இருந்தது.
இதையும் படிங்க: சபரிமலை நடை இன்று திறப்பு; பம்பையில் பக்தர்கள் நீராடத் தடை!