சென்னை: சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர், கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார். இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் குறிப்பிட்ட லாரி, விபத்தில் ஈடுபடவில்லை என்றும், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் லாரியின் எண் குறிப்பிடப்படவில்லை என்றும், இந்த வழக்கில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும், காப்பீட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், அருளப்பன் மனைவி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அருளப்பன் மனைவி வசந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வு, குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல்துறை அதிகாரியே விடுதலை செய்துள்ளது குறித்து அதிர்ச்சி தெரிவித்தது.
மேலும், தமிழக உள்துறைச் செயலாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். அரசுத் தரப்பில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது தவறு என்றும், உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் குறிப்பிட்ட லாரி, விபத்தில் ஈடுபட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறி வசந்தியின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதி செய்யும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்றும், குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மற்ற குற்ற வழக்குகளைப் போன்று விபத்து வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகள் தீவிரம் காட்டுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரிகளில் எம்பில் படிப்பில் மாணவர்களை சேர்க்கக் கூடாது - யுஜிசி எச்சரிக்கை