நாடு பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் குடியுரிமையை ஏற்று சென்றவர்களுக்குச் சொந்தமாக நாட்டிலுள்ள சொத்துக்கள், எதிரி சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சொத்துக்களைப் பாதுகாக்க, எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு, கட்டுப்பாட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். சென்னை மண்ணடி, ஆர்மேனியன் தெருவில், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்புக்குச் சொந்தமான இடம் உள்ளது.
இவ்விடம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடமாகும். இந்த இடத்தில் எஸ்.ஆர்.கே.பாபு என்பவர் இஸ்மாயில் சாஹிப் என்ற பெயரில் ஜவுளி கடை நடத்திவருகிறார். இந்தக் கடையை அலுவலர்கள் காலி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
அலுவலர்களின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்கக்கோரி, எஸ்.ஆர்.கே. பாபு, இஸ்மாயில் சாஹிப் நிறுவனத்தின் பங்குதாரர் ரஹ்மத்துல்லா ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், "ஆர்மேனியன் தெருவிலுள்ள 1,140 சதுர அடி எதிரி சொத்தை, எதிரி சொத்து கட்டுப்பாட்டாளரிடம் வாடகைக்குப் பெற்று, ஜவுளி வியாபாரம் நடத்தி வருவதாகவும், வாடகையை முறையாக செலுத்தி வருகிறேன்.
இக்கட்டடத்தின் சிறிய இடத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ஏற்பாட்டில் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கட்டடத்தில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் உள்ளிருக்கும் பொருள்கள் வெளியேற்றப்படும் என எதிரி சொத்து கட்டுப்பாட்டாளர் அலுவலக ஊழியர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினரும் தெரிவித்தனர். தங்களை இக்கட்டடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம் எனக்கோரி விண்ணப்பித்தும், எந்தப் பதிலும் இல்லை.
தற்போதுள்ள இடத்தில் இருந்து தங்களை காலி செய்ய தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தனர். இவ்வழக்கை இன்று(ஜன.8) அவசர வழக்காக விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டடத்திலிருந்து அந்த நிறுவனத்தைக் காலி செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, இவ்வழக்கு குறித்து எதிரி சொத்து பாதுகாவலர், சென்னை மாவட்ட ஆட்சியர், புரசைவாக்கம் வட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்குமாறு கூறி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.