சென்னை: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வழிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் முறையான சோதனை நடத்தப்படாததால், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை எளிதாக எடுத்துவருவதாகவும், அங்குள்ள கடைகளிலேயே ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்கள் விற்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது நீதிபதிகளும் விடுமுறை காலத்தில் சென்றிருந்தபோது, இந்த நிலையை தாங்களும் பார்த்ததாகவும், முறையான சோதனை, திட்டமிட்ட செயல்படுத்துதல் இல்லை என்றும் குற்றம்சாட்டினர். சீல் வைப்பது, அபராதம் விதிப்பது என்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக செயல்படுகிறதா இல்லையா என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் குறைபாடுகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மே மாதத்தில் மட்டும் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மசினகுடியில் பிளாஸ்டிக் சேகரித்து, வனத்தில் கொட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, மேலும் தண்ணீர் ஏ.டி.எம்.கள் பயன்பாட்டில் இல்லை என்கிற குற்றச்சாட்டு, அவற்றின் பராமரிப்பை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியுமா என்பவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட எல்லையில் எத்தனை சோதனைசாவடிகள் உள்ளன, எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், யார் யார் நியமிக்கப்பட்டனர், எவ்வளவு பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த விரிவான அறிக்கையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள கடைகளில் ஒரு முறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சுற்றுலாத் தலங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வாட்டர் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் மீண்டும் நீலகிரியில் பிளாஸ்ட்டிக் பயன்பாடு அதிகரித்து இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சுகாதாரத்துறையில் 800 ஓட்டுநர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை!