சென்னை: கொரோனா காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த மருத்துவர் ஏ.கே. விவேகானந்தன், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, தொற்று பாதித்து 2020ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் கொரோனாவுக்கு பலியான முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என்றும் இரு குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருவதால், பொறியியல் பட்டதாரியான தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விவேகானந்தனின் மனைவி திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் விண்ணப்பம் சீனியாரிட்டி அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை சீனியாரிட்டி அடிப்படையில் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
விண்ணப்பம் சீனியாரிட்டி அடிப்படையில் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படாவிட்டால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதித்து, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஒருதலை காதல்; கல்லூரி மாணவர் விபரீத முடிவு!