சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கைதான கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில், சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுப்பதாகக் கூறி, மற்றொரு நடன ஆசிரியரும் தவறான முறையில் நடந்து கொண்டதாக, மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது பெயரை குறிப்பிடாமல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நடன ஆசிரியருக்கு காவல்துறையில் செல்வாக்கு உள்ளதால், அவரது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தாக்கல் செய்த மனுவை உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி, தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மனுதாரர் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி, அடிப்படை முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியை நியமித்து, அதன் மீதான விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என்று சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தால், புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேல்மா சிப்காட் விவகாரம்: அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து..