சென்னை: அனைத்திந்திய நிறுவனத்தில் ஆறு மாதக் கால 'மாற்று மருத்துவத்தை' படித்த 61 பேர் எந்த வித சட்ட இடையூறும் இன்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசும் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு மாத காலம் மருத்துவம் படித்து விட்டு மருத்துவராகச் சிகிச்சை அளிக்கும் இவர்களை நம்பி பல உயிர்களைக் கொடுக்க முடியாது எனவும் மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யாத மாற்று மருத்துவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு,
இது குறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும் படி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பினார். இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் சுகாதாரத் துறை இணை இயக்குநருடன் போலீசார் நடத்திய விசாரணையில், நான்கு டாக்டர்கள் போலியாக செயல்பட்டது தெரியவந்தது.
பின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் பின்னர் அந்த போலி மருத்துவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலி டாக்டர்களை கண்டறியும் நடவடிக்கையில் தீவிரமாக விசாரணையில் போலீசார் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: +2 தேர்வு விடை குறிப்புகள் சமூக வலைத்தளங்களில் கசிவு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!