சென்னை: காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த வருபவர், பிரித்திகா யாஷினி. இவர் இந்தியாவின் முதல் திருநங்கை உதவி குடியேற்றத் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நான் எனது பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். இதனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் வெறுமையைப் போக்க குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தேன்” என குறிப்பிட்டு உள்ளார். மேலும், “குழந்தையைத் தத்தெடுக்க டெல்லியில் உள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.
ஆனால், நான் ஒரு திருநங்கை என்ற காரணத்தால், என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்தும், என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், குழந்தையைத் தத்தெடுப்பதில் சிறார் நீதிச் சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் காட்டவில்லை. குழந்தையை நல்ல முறையில் வளர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்று மட்டுமே விதிகள் இருக்கின்றன. நான் அரசுப் பணியில் இருப்பதால் குழந்தையை சிறந்த முறையில் என்னால் வளர்க்க முடியும்” எனவும் அவர் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காவல் துறை உதவி ஆய்வாளர் பிரித்திகா யாஷினியின் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி விசாரணை மேற்கொண்டார். அப்போது, இந்த மனு தொடர்பாக வருகிற 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்துக்கும் உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது நோயாளி மரணம்: டிஜிபி சைலேந்திர பாபு புதிய உத்தரவு!