சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக தாய் செங்கையம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.
அதில், கோவை சிறையில் கைதிகள் மற்றும் வார்டன்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து வெளியான செய்தியைப் பார்த்து தங்கள் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மானிடம், மகனைச் சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி தினேஷை சந்தித்தபோது, தினேஷ் சிறை வார்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையிலும், முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்ததாக தெரிய வந்துள்ளதாகக் கூறி உள்ளார்.
மேலும், தனது மகன் உள்பட 7 விசாரணைக் கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளதாகவும், காயமடைந்து உள்ள தனது மகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கும்படி சிறைத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் நதியா ஆஜராகி, இந்த விவகாரத்தில் முழு தகவல் தெரிய வேண்டுமென்றால் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
காவ ல்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி 7 பேருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது வயிற்றில் பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 7 பேரின் உடல் நிலை குறித்து விரிவான மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:பத்து வருட போராட்டத்திற்கு 8 மணி நேரத்தில் தீர்வு.. அசத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்!