சென்னை: மதுராந்தகத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி ஆகிய இருவருக்கும், கடந்த 1991 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்களுக்கு, செய்யூர் நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கி உள்ளது.
தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு சரஸ்வதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மதுராந்தகம் நீதிமன்றம், மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாயை 2014ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும் என 2021 ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, ஜீவனாம்ச பாக்கித் தொகை 6 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாயைக் கேட்டு, சரஸ்வதி தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்தது.
இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், சரஸ்வதி உயிரிழந்துள்ளார். இதனால் சரஸ்வதி தொடர்ந்த வழக்கில் தன்னை இணைத்து ஜீவனாம்ச பாக்கியை வழங்கக் கோரி அவரது தாயார் ஜெயா மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று, வழக்கில் அவரை சேர்த்து மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 29) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம், “இந்து வாரிசுரிமைச் சட்டம் 15வது பிரிவின்படி, மனைவி இறந்து விட்டால் அவருடைய சொத்துக்கள் குழந்தைகளுக்கும், அதன் பிறகு கணவருக்கும், அதற்கும் பிறகே பெற்றோருக்கும் வரும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை தம்பதிக்கு விவாகரத்து ஆகிவிட்டதால், பாக்கித் தொகையை பெற சரஸ்வதியின் தாயாருக்கு உரிமை உள்ளது. இதன் காரணமாக வழக்கில் ஜெயாவை இணைத்து மதுராந்தம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேலும், அண்ணாதுரையின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கில் சரணடைந்த இருவர் - போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு