தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை சட்டப்பேரவைக்குள் எடுத்து வந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று (செப். 23) விசாரணைக்கு வந்தது
அப்போது திமுக வழக்கறிஞர்கள், 'சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காட்டிப் பொருள் விற்கப்படுவதை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்துள்ளனர்' என வாதிட்டனர்.
இதையடுத்து, ஆகஸ்ட் 28ஆம் தேதி ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ-க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸை எதிர்த்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தடையை மீறி குட்கா வைத்திருந்தது உரிமை மீறல் இல்லை என நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, உரிமைக்குழு திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'உரிமைக் குழுத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏற்கெனவே ஸ்டாலினுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். எனவே, தற்போது பாரபட்சத்துடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2017ல் அனுப்பப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரை நீதிமன்றத்தால் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸூக்கும் தடை விதிக்க வேண்டும்' என திமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அரசு தரப்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும், சபாநாயகர் விசாரணை நடத்தி அதன் பின்னரே நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயனா, குட்கா பாக்கெட்டுகளை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என ஏற்கெனவே தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி இன்று (செப். 24) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
மேலும், சட்டப்பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்குழு, உரிமைக்குழுத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு கியூஆர் கோடு தெரிவிக்க உத்தரவு!