சென்னை: கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட்களில் உள்ள எண்ணெயின் அளவில் குறைபாடு இருப்பதாக யூடியூப் தளத்தில் அக்ஷய் என்பவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், 3 லட்சத்து 35 ஆயிரம் பின் தொடர்பாளர்களை வைத்துள்ள யூடியூபரால் நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோல்டு வின்னர் எண்ணெய்யை தயாரிக்கும் காளீஸ்வரி நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்து, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று (அக்.02) விசாரணைக்கு வந்தது. விசாரணையில், காளீஸ்வரி நிறுவனத்தின் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, கடந்த 30 ஆண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எண்ணெய்களை தயாரித்து வருவதாகவும், முறைகேடான வணிக நடைமுறையை கையாளவில்லை என்பதால், தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிவகாசி வழித்தடத்தில் பாதுகாப்பு பணிகள்.. இரண்டு நாட்களுக்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
மேலும், கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட்டுகளை சோதனை செய்வதற்கு யூடியூபர் அக்ஷய் வைத்திருந்தது சரியான அளவீடுகளைக் கொண்ட கோப்பைகள் கிடையாது என்றார். அதனைத் தொடர்ந்து, ஒரு லிட்டர் பாக்கெட்களில் எடுக்கப்பட்ட சரியான அளவீடுகள் கொண்ட ஆய்வுகளைத் தாக்கல் செய்தார்.
அதனையடுத்து, நிறுவனத்தின் மீதான நற்பெயரைக் கெடுக்கும் வகையில் யூடியூபர் உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், இது போன்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்றும் வாதிட்டார்.
இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் தரப்பில் எவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி மஞ்சுளா, “யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவால் கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, அதற்கான இழப்பீடாக 7 லட்சம் ரூபாயை காளீஸ்வரி நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்” என யூடியூபர் அக்ஷய்க்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி.. சென்னையில் தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!