சென்னை: பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் (covid-19 vaccination) எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில், தற்போது தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள், குறிப்பிட்ட வயதைக் கடந்த மாணவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக் கூடாது
இந்த சுற்றறிக்கையை எதிர்த்து அறம் என்ற அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், "தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தாத நிலையிலும், சிலர் இயற்கை மருத்துவத்தை நாடும் நிலையிலும் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என வாதிடப்பட்டது.
ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், சொந்த காரணங்களுக்காகத் தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது எனவும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும், மாணவர்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: COVID-19 vaccine: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு ஆபத்து அதிகம்!