சென்னை: இது குறித்து தீர்ப்பு விவரங்கள்: ’சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி வழங்காத காவல்துறையின் செயலை நீதிமன்ற அவமதிப்பாகவே தான் கருத வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கைகளை தனி நீதிபதி மேற்கொள்ளாமல், நவம்பர் 4 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ததுடன், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்தது சட்டப்படி அனுமதிக்க தக்கதல்ல என கருதப்படுகிறது.
பொது சாலைகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது அடிப்படை உரிமை. கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது. புதிய உளவுத் தகவல்கள் என்ற பெயரில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை காவல்துறை உறுதி செய்திருக்க வேண்டும். அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளதக்கதாக இருக்க வேண்டுமென அவசியம் இல்லை. மாற்றுக் கொள்கை கொண்ட அமைப்புகள் இருக்கின்றன என்பதற்காக ஒரு அமைப்பின் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்க முடியாது.
அரசின் முடிவு, பொது நலன் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கொள்கை, அரசியல் சார்பு அடிப்படையில் இருக்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
மக்கள் நல அரசின் அணுகுமுறை என்பது குடிமக்களின் உரிமைக்கு எதிராக இருக்கக்கூடாது. ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேண, அமைதியான முறையில் பேரணி, அணிவகுப்பு, பொதுக்கூட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்ததுடன், மூன்று தேதிகளை குறிப்பிட்டு அணிவகுப்புக்கு அனுமதி கோரி அரசிடம் ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பிக்க வேண்டும். அந்த மூன்று தேதிகளில், ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும்.
ஒழுக்கத்தை கடைபிடித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும். பிறரை தூண்டும் வகையில் பேரணி நடத்தக்கூடாது. அமைதியான முறையில் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:Teddy Day 2023: காதலர் தின வாரத்தின் 'டெடி டே' ஸ்பெஷல் என்ன?