சென்னை: ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்குப் பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றி விட்டு புதிய வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது.
இந்த சுற்றறிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு முதல் புதிய வாகனங்களைப் பயிற்சிக்குப் பயன்படுத்த வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், "2020 ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கரோனா பேரிடர் காரணமாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படாததால், புதிய வாகனங்களைப் பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் 15 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், கரோனா காரணமாக வாகனங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்தவில்லை என்றும் கூறி, பயிற்சிக்கு புதிய வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி, போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: படைவீரர் பிரதீப்பின் உடலை பெற்றுக்கொண்ட கேரள அமைச்சர்!