சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் "கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது, வாஷிங்டன் நகரில் உள்ள பெரார் அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், ஐந்து முக ருத்ராட்சம் உள்ளிட்ட புராதன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் திருடப்பட்டுள்ளதால், இது தொடர்பாக சிபிஐ விசாரித்து சிலைகளை மீட்கும் வகையில் இணை இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் தனி குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு முன் இன்று (மார்ச்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மனுதாரர் தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்து, சிறப்பு அதிகாரியை நியமனம் செய்ததாகவும், அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள தகவல்களை மனுதாரர் மறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, இந்த வழக்குகளை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்