சென்னை: மதுரவாயலில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுதொடர்பாக திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார், கனல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கடந்த ஆகஸ்ட மாதம் 15ஆம் தேதி, கைது செய்யப்பட்டார்.
அதன்பின் நிபந்தை ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், கனல் கண்ணல் மனு தாக்கல் செய்தார். செப்டம்பர் 1ஆம் தேதி அன்று கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று (செப் 2) மாலை புழல் சிறையில் இருந்து கனல் கண்ணன் விடுவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன், இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்துக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன், போராடுவேன் என்று உறுதியாக தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன், சுதந்திர தினத்தன்று கருத்துரிமையை முடக்கும் வகையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கருத்துரிமை நசுக்கப்பட்டு வருகிறது. இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு மாறாக இந்துக்களுக்கு எதிராக முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் இந்துக்களுக்கான பணிகளை தொடருவோம் எனத் தெரிவித்தார்.