சென்னை: நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகள் உள்ளிட்ட 49 பேரை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து, அதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்த பரிந்துரைக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில், இரு மதத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் நடந்த கொலை வழக்கில், 2002ஆம் ஆண்டு கோவை நீதிமன்றம் விஜயன் என்ற விஸ்வநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தன் கணவரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி அவரின் மனைவி சித்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்த பின்னர், சுமார் 17 ஆண்டு காலம் சிறையில் உள்ளதாகவும், அதனால் தண்டனை காலத்திற்கு முன் விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விஜயன் சார்பாக அவரது வழக்கறிஞர் முகம்மது சைபுல்லா ஆஜராகி, சிறையில் இருந்த காலத்தில் விஜயன் சிறை விதிகளை முழுமையாக கடைபிடித்துள்ளார் என்றும், எனவே அவரை முன் விடுதலைக்கு உத்தரவிட வேண்டும் வாதிட்டார். மேலும் தற்போது சிறுநீரக பாதிப்பு காரணமாக சாதாரண சிறை விடுப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, "நன்னடத்தை அடிப்படையில் சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரைக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை தொடர்ந்து நிலுவையில் உள்ளது, மேலும் ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை" என்றார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் கணவருக்கு கடந்த 40 நாட்கள் சிறை விடுப்பு வழங்கபட்டுள்ளதை சுட்டிக்காட்டி, நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணை போல, மனுதாரரின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு வழங்குவதாகவும், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் 25 ஆயிரம் ரூபாய் உத்தரவாத அளித்து இடைக்கால ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! கண்டம் விட்டு பாயும் ஏவுகணை சோதனை எனத் தகவல்!