சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக, கடந்த 2015ஆம் ஆண்டு 10 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்தப்பட்டனர். 2 வருடங்கள் தொகுப்பூதிய பணி முடித்தபின், பணி நிரந்தரம் செய்யப்படும் என பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 8 வருடங்கள் ஆகியும் 4 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்தால், அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து, 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால், செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு தொகுப்பூதிய செவிலியர்களையும் அவர்கள் செய்யும் பணி குறித்து ஆய்வு செய்து, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென்று, கடந்த 2022ஆம் ஆண்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியும் மற்றும் உத்தரவு பிறப்பித்தும், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் நடவடிக்கை எடுக்காததால், அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜன.6) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான செவிலியர்கள் போதுமான விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும், ஆகையால் சரிபார்ப்புப் பணிகளை முடிக்க மேலும் 12 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளது? எவ்வளவு சரிபார்ப்புகள் முடிந்துள்ளது? காத்திருப்பு எவ்வளவு? எத்தனை மாவட்டங்களில் பணிகள் முடிந்துள்ளது? என்ற விவரங்களை அரசு தெரிவிக்கவில்லை. இதுவரை 8 ஆயிரத்து 626 விண்ணப்பங்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது" எனக் கூறினர்.
மேலும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணியை, நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒப்பீடு செய்ய, ஒய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய சரிபார்ப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டனர். இந்த குழுவிடம், இதுவரை சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஜனவரி 7ஆம் தேதிக்குள் அரசு ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய உரிய ஆவணங்களை சரிபார்ப்புக் குழுவிடம் வழங்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், சரிபார்ப்புக் குழு தனது பணிகளை முடித்து மார்ச் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தேனி தென்கரை போலீசார் மிரட்டுவதாக தாய், மகள் தற்கொலை முயற்சி!