சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்தப் புகாரில், அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி காவல் துறையினர் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கெனவே ஜாமின்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ஜாமின்கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (டிச.1) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவசங்கர் பாபா கடந்த 6 மாதங்களாகச் சிறையிலிருந்து வருவதாகவும், அனைத்து விசாரணையும் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே, இரு வழக்குகளில் சிவ சங்கர் பாபாவிற்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் தன்மையில் எந்தவித மாற்றமுமில்லை எனக் கூறி சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 53 ஆண்டுகளுக்குப் பின் மதுரை மீனாட்சி கோயில் பூஜை செய்த மதுரை ஆதீனம்!