சென்னை அடுத்த நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தச்சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்பவரை காவல் துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களின் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார். எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக ரூ.3 கோடி வழங்க வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும், சுவாதி கொலை திட்டமிட்ட சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இழப்பீடு கோரி சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்திய நீதிபதி, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் செயின் பறிப்பு... சிசிடிவி காட்சி