சென்னை: இயக்குநர் சசிக்குமாரின் நடிப்பில் கடந்த மார்ச் 03ம் தேதி திரையரங்குகளில் வெளியான "அயோத்தி" திரைப்படத்தின் திரைக்கதை தன்னுடைய கதை என்று கூறி பேராசிரியர் சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், தான் எழுதி தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு "யாதும் ஊரே"என்ற தலைப்பில் பதியப்பட்ட திரைக்கதையை, தனது அனுமதி இல்லாமல் திருடி 'அயோத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும் படத்தின் திரைக்கதை மீதான உரிமம் தனக்குச் சொந்தமானது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் மேலும் பிற மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்யும் உரிமை வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.சௌந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் சசிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அயோத்தி படத்தின் கதை கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்ததாகவும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே திரையரங்குகளில் படம் வெளியான நிலையில் ஓடிடி, இணையதள உரிமை, தொலைக்காட்சி உரிமைகள் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என வாதிட்டார். இதனையடுத்து அயோத்தி படம் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான தடைகோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிபிஐ, திரிணாமுல், என்சிபி தேசிய கட்சி அந்தஸ்து இழப்பு.. ஆம் ஆத்மிக்கு கிடைத்த அங்கீகாரம்!