சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் , 489 பேரூராட்சிகள் ஆக மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நாளை (பிப்ரவரி 19) தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வேலூர் மற்றும் கோவையை சேர்ந்த ரகுபதி, முருகேசன் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் கடந்த 10 நாட்களாகக் கட்டுக்கடங்காத விதிமீறல்கள் நடைபெறுகின்றன.
மேலும், காவல்துறை கண்டுகொள்ளாமல் உள்ளது என்றும், ஆளுங்கட்சியினர் பரிசுப் பொருட்கள் மற்றும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்காமல் தேர்தல் ஆணையமும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, தேர்தலுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், அனைத்து நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமெனவும், தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் புகார் அளித்தாலும் தேர்தல் ஆணையமோ? அல்லது காவல்துறையோ? நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி நேர்மையான, நியாயமான தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு டிஜிபி தரப்பில் கோவையில் 29 இடங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், தேர்தலை அமைதியாக நடத்த உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், எனவே துணை ராணுவப்படையை பணியில் ஈடுபடுத்த அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
கோவையைப் பொறுத்தவரை அதி விரைவுப்படை பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம், டிஜிபியுடன் கலந்து பேசி தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப் படையின் உதவியை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேற்கொண்டு எந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்தனர். மேலும் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திமுகவை கண்டித்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா - வலுக்கட்டாயமாக கைதுசெய்த போலீஸ்