சென்னை: கரோனா தொற்று காரணமாகக் கடந்தாண்டு உயிரிழந்த நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அவரது உடல் வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஆனந்தி, வேலங்காட்டிலிருந்து தனது கணவரின் உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதனை மாநகராட்சி நிராகரித்துவிட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு இடுகாட்டிலிருந்து மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுப்பது சாத்தியமில்லாதது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று(ஜூலை.22) நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதன்படி தனி நீதிபதியின் உத்தரவுப்படி மருத்துவர் சைமனின் உடல் வேலங்காடு இடுகாட்டிலிருந்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் உடலை மறு அடக்கம் செய்ய தடை