சென்னை: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (51) என்பவரை செப்டம்பர் 24ஆம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ஆனால், புலியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, புலியை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்குகளில் குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அந்தப் புலியை கொல்லக்கூடாது, நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான புலிகள் மட்டுமே உள்ளன என்று தெரிவித்தனர். உயிருடன் பிடித்த பின்பு அதன் குணாதிசயங்களை ஆராய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
வனத்துறைக்குப் பாராட்டு
இந்த நிலையில் வழக்கு இன்று (அக்.21) மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு, மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, வனத்துறை சார்பில், தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசயங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது - கே.என்.நேரு