சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (டிச. 21) தீர்ப்பளித்தது. மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். இதன்படி, பொன்முடி அமைச்சர் பதிவியை இழந்தார். பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு: உயர்நீதிமன்ற தீர்ப்பால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்துள்ள க.பொன்முடியை தேர்வு செய்த திருக்கோவிலூர் தொகுதி விரைவில் காலியானதாக அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
மேலும், வியாழக்கிழமை அன்று தீர்ப்பு வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், வெள்ள பாதிப்புகளை குறித்து நேரில் ஆய்வு செய்தார். அவர் சென்னை திரும்பிய உடன், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (டிச. 22) நேரில் சந்தித்து வழக்கு குறித்து பொன்முடி ஆலோசனை நடத்தினார். தகுதி நீக்கம் செய்யபட்ட மறுநாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது: எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் சட்டப் பேரவை தொகுதிக்கான தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதற்கிடையே, 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் பொன்முடி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில், அடுத்த சட்டப்பேரவை உறுப்பினர் போட்டிக்கு யார் என்பது குறித்தும் அல்லது, இந்த வழக்கு குறித்தும் ஆலோசித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
திமுக உச்சநீதிமன்றத்தை நாடும்: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனை, அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்டதாகவும், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயாராக உள்ளதாகவும் திமுக எம்பியும் திமுகவின் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 1964ல் தனுஷ்கோடியில் நடந்தது என்ன? சிதிலங்கள் சொல்லும் புயலின் கதை..!